19
Thu, Oct
19 New Articles

ரூ.24 கோடியில் செலவில் சுசீந்திரம் புறவழிச்சாலை

News

ரூ.24 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுசீந்திரம் புறவழிச்சாலை திட்டப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்தது. தார்சாலையாக அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

சுசீந்திரம், ஜூலை 27: குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும். தமிழகத்தின் பிற மாவட்டப்பகுதிகளில் இருந்தும், வடமாநிலங்களில் இருந்தும், கேரள மாநிலப்பகுதிகளில் இருந்து சுற்றுலாவாகவும், ஆன்மிகப் பயணமாகவும் வாகனங்களில் வருபவர்கள் பயன்படுத்தும் முக்கிய சாலையாக நாகர்கோவில்– கன்னியாகுமரி சாலை இருந்து வருகிறது.

மேலும் இந்த சாலையில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோவிலும் அமைந்துள்ளது.  சுசீந்திரத்துக்கு வரக்கூடிய வாகனங்களும், கன்னியாகுமரிக்கு செல்லக்கூடிய வாகனங்களும் ஒரே சாலையில் செல்ல வேண்டிய நிலையில் ஒருசில நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை இருந்து வருகிறது.

இதனால் நாகர்கோவில்– கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சுசீந்திரம் செல்லாமல், சுசீந்திரத்துக்கு முன்பாக உள்ள ஆஸ்ராமம் பகுதியில் இருந்து வழுக்கம்பாறையை சென்றடையும் வகையில் சுசீந்திரம் புறவழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து மத்திய சாலை நிதி திட்டத்தில் இருந்து ரூ.24 கோடியில் ஆஸ்ராமத்தில் இருந்து வயல்வெளிகளுக்கு நடுவே காக்கமூர், கற்காடு, பரப்புவிளை, வழுக்கம்பாறையின் பின்பகுதி வழியாக கன்னியாகுமரி சாலையை சென்றடையும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு, கடந்த ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. மொத்தம் 3.6 கி.மீ. நீளமுள்ள இந்த சாலையில் 3 சிறுபாலங்களும், ஒரு பெரிய பாலமும் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

பணிகள் தொடங்கி ஒரு ஆண்டு முடிந்த நிலையில் சாலையின் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. 3 இடங்களில் சிறுபாலங்களும் அமைக்கப்பட்டுவிட்டன. பரப்புவிளை அருகே 60 மீட்டர் நீளத்தில் அமைய உள்ள பாலப்பணியும், தார்தளம் அமைக்கும் பணியும் நடைபெற வேண்டி உள்ளது. பழையாறு தண்ணீர் பாசனத்துக்கு செல்ல வசதியாக 3 கண்களுடன் இந்த பாலம் அமைய இருக்கிறது. பாலத்துக்கான அஸ்திவாரப்பணிகள் முடிந்துவிட்டன. 

இன்னும் 6 மாதத்துக்குள் பாலம் வேலை முடியும் எனக்கூறப்படுகிறது. தார்தளம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க இருக்கிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சுசீந்திரம் புறவழிச்சாலை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகளால் கூறப்படுகிறது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS