23
Thu, Nov
10 New Articles

புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடை ஒரேநாளில் அகற்றம்

News

இரணியல் அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடை, பொதுமக்களின் தீவிர போராட்டத்தால் ஒரே நாளில் அகற்றப்பட்டது.

இரணியல், ஜூலை 05: குமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த மதுக்கடைகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி மூடப்பட்டது. மூடப்பட்ட டாஸ்மாக் மதுக் கடைகளை மாற்று இடத்தில் திறப்பதற்காக அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்தநிலையில் நேற்று முன்தினம் இரணியல் அருகே காட்டுவிளையில் உள்ள ஒரு தோட்டத்தில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. 

இதுபற்றி தகவல் அறிந்த ஆளூர், காட்டுவிளை, காரங்காடு, பின்னவிளை, நுள்ளிவிளை, மூலச்சன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திடீரென கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

இதுகுறித்து தகவல் அறிந்த இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் குளச்சல் உதவி சூப்பிரண்டு சாய் சரன் தேஜஸ்வி ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் கடையை அப்புறப்படுத்தினால் மட்டுமே போராட்டத்தை விட்டு கலைந்து செல்வோம் என்று உறுதியாக கூறினார். இதனால் விடிய– விடிய போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

 மேலும், போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து அதிகாரிகள் கடையில் உள்ள மதுபாட்டில்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டனர்.

இதன்காரணமாக நேற்று காலை 7 மணியளவில் போராட்ட பகுதிக்கு வந்த டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் போலீசார் கடையில் இருந்த மதுபாட்டில்கள் மற்றும் மேஜை, நாற்காலி என அனைத்து பொருட்களையும் வேனில் ஏற்றி கடையை அப்புறப்படுத்தினர். 

இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS