23
Sat, Sep
8 New Articles

குழந்தை தொழிலாளர்கள் 125 பேர் மீட்பு : மீன்வலை தொழிற்சாலைகளில் கலெக்டர் ஆய்வு

News

மீன்வலை தயாரிப்பு தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் 125 பேர் மீட்கப்பட்டதைதொடர்ந்து மீன்வலை தொழிற்சாலைகளில் நேற்று கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நாகர்கோவில், ஜூலை 2:  நாகர்கோவில் அருகே உள்ள அனந்தநாடார்குடி மற்றும் மேலகிருஷ்ணன்புதூர் பகுதிகளில் உள்ள மீன்வலை தயாரிப்பு தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் 125 பேர் மீட்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து நாகர்கோவில், எறும்புகாடு ஆகிய இடங்களில் உள்ள மீன் வலை தயாரிப்பு தொழிற்சாலைகள் மற்றும் தம்மத்துகோணத்தில் உள்ள மீன்வலை தயாரிப்பு தொழிற்சாலைகளில் குழந்தைகளை பணியமர்த்தியுள்ளனரா? என்பதை, நேற்று கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். 

14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் தொழிலில் ஈடுபடுத்தக்கூடாது. 14 வயது நிறைவடைந்து 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை அபாயகரமற்ற பணிகள் நடைபெறும் ஆலைகளில் சட்ட வரன்முறைக்கு உட்பட்டு,  பணிக்கு அமர்த்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அபாயகரமான பணிகளான கனிமம், சுரங்கம், வெடி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது. குழந்தைகளை இதுபோன்ற தொழிற்சாலைகளில் தொழிலில் ஈடுபடுத்தும் நபர்களின் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  

குமரி மாவட்டத்தில் சுமார் 67 மீன்பிடி வலை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளது. இதில், வடமாநில குழந்தைகளை தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ளார்களா? என இன்று (அதாவது நேற்று)  நேரில் சென்று ஆய்வு செய்யப்பட்டது. 

மேலும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுப்பதற்காக 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மீன்பிடிவலை தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் வழிநெறிமுறைகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள் அளித்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பயிற்சிகள் நடைபெறும் போது, தொழிற்சாலை உரிமையாளர்கள் கலந்து கொண்டு நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் தங்களது குழந்தைகளை தொழிலில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு சிறந்த கல்வி அளித்திட உறுதுணையாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் தொழிலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தால், அதனை உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.

முன்னதாக கலெக்டர் எறும்புக்காடு மீன்பிடி வலை தொழிற்சாலையில் பணியாற்றும் இரண்டு பெண் தொழிலாளர்களிடம் வயது பற்றி விசாரணை மேற்கொண்டார். அப்போது, அவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதை அலுவலர்கள் மூலம் உறுதி செய்தார்.

ஆய்வின்போது, இணை இயக்குனர் சதானந்தம் (திருநெல்வேலி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்), துணை இயக்குனர் ரவிச்சந்திரன், உதவி இயக்குனர் சஜீன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி குமுதா, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அருளரசு, மாவட்ட தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் ஞானசம்பந்தன், உதவி ஆய்வாளர் ஆறுமுகம் ஆகியோர் உடன் சென்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS