23
Wed, Aug
6 New Articles

கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை 710 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல்

News

நாகர்கோவில் கடைகளில் நகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் 710 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன.

நாகர்கோவில், மே 10: குமரி மாவட்டத்தில் குறிப்பிட்ட மைக்ரான் அளவுக்கு கீழ் உள்ள பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கப்கள் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தடையை மீறி நாகர்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் பாலித்தீன் பைகள் மற்றும் கப்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து நகராட்சி கமி‌ஷனர் சரவணகுமார் உத்தரவின்பேரில், நகர்நல அதிகாரி வினோத்ராஜா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மாதவன்பிள்ளை, ராஜா, பகவதிப்பெருமாள், தியாகராஜன், பிரிஜேஸ், ராஜேஸ், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் குமார், சுடலை மாடன் ஆகியோர் நேற்று நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலய சந்திப்பு பகுதி முதல் கோட்டார் வரையும், கம்போளம் ரோடு பகுதியிலும் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில், பாலித்தீன் பைகள் விற்பனை செய்யும் கடைகள் உள்பட 7 கடைகளில் சுமார் 710 கிலோ எடையுள்ள பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை நகராட்சி அதிகாரிகள் நகராட்சி வாகனத்தில் ஏற்றி நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவை அழிக்கப்பட்டன.

அதிகாரிகளின் இந்த திடீர் நடவடிக்கையால் கோட்டார் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS