26
Fri, May
12 New Articles

ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாள்

News

ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாள் தேர்வை குமரி மாவட்டத்தில் 3,996 பேர் எழுதினார்கள்.

கன்னியாகுமரி, ஏப்.30: தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்–1 நேற்று நடந்தது. குமரி மாவட்டத்தில் இந்த தேர்வுக்காக தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி, அமலா கான்வென்ட், மார்த்தாண்டம் எல்.எம்.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கிறிஸ்து ராஜா மெட்ரிக் பள்ளி, நாகர்கோவில் புனித ஜோசப் கான்வென்ட், எஸ்.எல்.பி. மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. மெட்ரிக் பள்ளி, டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்காட் கிறிஸ்டின் பள்ளி என மொத்தம் 10 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தேர்வு எழுத 4,171 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இவர்களில் 175 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதைத் தொடர்ந்து நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வை 3,996 பேர் எழுதினார்கள்.

முன்னதாக தேர்வு எழுதுவதற்காக காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்திற்கு வந்து விட்டனர். 8.30 மணி முதல் 9.30 மணி வரை தேர்வு மைய நுழைவாயிலில் காவலர் சோதனை நடந்தது. தேர்வு அறைக்குள் ஹால் டிக்கெட் மற்றும் நீலம் அல்லது கருப்பு முனை பேனா மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது. செல்போன், மடிக்கணினி போன்றவற்றை தேர்வறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தேர்வை கண்காணிக்க மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ தலைமையில் ஒரு குழு, நாகர்கோவில் மற்றும் பத்மநாபபுரம் கோட்டாட்சியர்கள் தலைமையில் 2 குழு, ஆதிதிராவிடர்கள் நலத்துறை அதிகாரி தலைமையில் ஒரு குழு, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் இணை இயக்குனர் நாகராஜன் முருகன் தலைமையில் ஒரு குழு என மொத்தம் 5 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த குழுவினர் அனைத்து தேர்வு மையங்களுக்கும் சென்று திடீர் ஆய்வு நடத்தினார்கள். மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ நாகர்கோவில் டதி பெண்கள் பள்ளியில் நடந்த தேர்வை ஆய்வு செய்தார். இதுபோல அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் இணை இயக்குனர் நாகராஜன் முருகன் தலைமையிலான குழுவில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எலிசபெத் மற்றும் கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்–2 இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்க இருக்கிறது. இதற்காக மாவட்டம் முழுவதிலும் மொத்தம் 54 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை 24,513 பேர் எழுத இருக்கிறார்கள்

 

BLOG COMMENTS POWERED BY DISQUS