15
Fri, Dec
18 New Articles

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

News

கண்ணனூர் ஊராட்சியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

நாகர்கோவில், ஏப்.25: வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

இதேபோல் கல்குளம் தாலுகா வியன்னூர் வருவாய் கிராமத்துக்கு உள்பட்ட கண்ணனூர் ஊராட்சி புக்கோடு, பூந்தோப்பு, விராலிக்காடு பகுதிகளைச் சேர்ந்த ராஜ், ஞானசிகாமணி, சைமன் சைலஸ், விஜயகுமார், பழனித்தங்கம் ஆகியோர் நேற்று பொதுமக்களுடன் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:–

நாங்கள் நூற்றுக்கும் அதிகமான ஏழை குடும்பங்கள் புக்கோடு, பூந்தோப்பு விராலிக்காடு பகுதிகளில் வசித்து வருகிறோம். புக்கோடு ஆதிதிராவிட கிராமம் ஆகும். மேக்காமண்டபத்தில் அடைக்கப்பட்ட மதுக்கடையை இந்த ஊர் பகுதிக்குள் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இப்பகுதியில் அமைதியான சூழ்நிலைக்கு பங்கம் ஏற்படும். ஆகவே ஏழைகளாகிய எங்கள் வாழ்க்கை சீரழிந்து விடாமலிருக்க அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பொதுமக்களுமாக சுமார் 600 பேர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் புக்கோடு, சுனப்பாறையில் திறக்கவிருக்கும் டாஸ்மாக் மதுக்கடையை கைவிட கேட்டும், கண்ணனூர் ஊராட்சி மதுக்கடை தடை செய்யப்பட்ட ஊராட்சியாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆகவே ஏழைகளாகிய எங்கள் வாழ்க்கை சீரழிந்து விடாமலிருக்க, புக்கோடு சுனப்பாறை பகுதியிலோ அல்லது கண்ணனூர் ஊராட்சி எல்கைக்கு உள்பட்ட பகுதிகளிலோ இதுவரையிலும் அமைக்கப்படாமல் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அமைக்கும் முயற்சியை கைவிட கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS