23
Sat, Sep
8 New Articles

ஸ்மார்ட் கார்டில் தவறான வில்லேஜ் பெயர்கள்

News

ரேஷன் பொருட்கள் பெறுவதற்காக வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் வில்லேஜ் பெயர்கள் தவறாக அச்சிடப்டடிருப்பதால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில், ஏப்.20: ரேஷன் பொருட்கள் பெறுவதற்காக வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் வில்லேஜ் பெயர்கள் தவறாக அச்சிடப்பட்டிருப்பதால்  மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒ.டி.பி. பெறும் டோல்பிரி எண்கள் எப்போதும் பிசியாக இருப்பதால் மக்கள் மத்தியில் டென்சன் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக புழக்கத்தில் இருந்த ரேஷன் கார்டுகளை மாற்றி புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு முதலே பல்வேறு பணிகள் தொடர்ச்சியாக நடந்துவந்தன. முதற்கட்டமாக அனைத்து ரேஷன் கார்டுகளிலும் ஆதார் எண் மற்றும் மொபைல் எண்கள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அடுத்த கட்டமாக ரேஷன் பொருட்களுக்கு பேப்பர் பில் வழங்குவதற்கு பதில் பாயின்ட் ஆப் சேல் கருவி மூலம் வாங்கப்பட்ட பொருட்களின் விபரம் மற்றும் தொகை குடும்ப தலைவரின் மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பபட்டது. இதற்கிடையில் ஆதார் எண் இணைக்காதவர்களின் ரேஷன்கார்டுகளுக்கு பொருட்கள் வழங்குவது கடந்த நவமபர் மாதத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து ஆதார் பதிவு மையங்களிலும், ரேஷன் கார்டில் ஆதார் இணைக்க வட்ட வழங்கல் அலுவலகம் உள்ளிட்டவைகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. இதை தொடர்ந்து ரேஷன்கார்டில் ஆதார் எண் இணைக்க பல்வேறு கட்ட முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் தமிழக முதல்வரால் துவங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 5.50 லட்சம் ரேஷன்கார்டுகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணியை கலெக்டர் துவக்கி வைத்தார். முதற்கட்டமாக கல்குளம் தாலுகாவுக்கு 50 ஆயிரம் ஸ்மார்ட் கார்டுகள் அச்சிட்டு வந்ததால் அவற்றை வழங்கும் பணி நடந்தது. அதை தொடர்ந்து அகஸ்தீஸ்வரம், தோவாளை, விளவங்கோடு தாலுகாக்களுக்கு மொத்தமாக சேர்த்து 50 ஆயிரம் ஸ்மார்ட் கார்டுகள் வந்துள்ளன. இந்த நிலையில் மொபைல் எண் சரியாக வழங்காத சுமார் 69 ஆயிரம் பேரிடம் மீண்டும் அவர்களது மொபைல் எண்ணை சரியாக வழங்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. புதிய ஸ்மார்ட் கார்டு பெற்றவர்களின் பழைய ரேஷன் கார்டில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது என அச்சடித்து மீண்டும் அவர்களிடமே வழங்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க வில்லேஜ் மற்றும் ஊர் பெயர்கள் புதிதாக வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் தவறாக அச்சிடப்பட்டுள்ளதால் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 188 வருவாய் கிராமங்களில் பெரும்பாலான வில்லேஜ்களின் பெயர்கள் தமிழக அரசின் வழங்கல் துறை இணையதளத்தில் தவறாகவே உள்ளது. அதே தவறு ஸ்மார்ட் கார்டுகளிலும் அப்படியே வந்திருக்கிறது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் மயிலாடி கிராமத்தின் பெயர் மிலடி எனவும், பறக்கைக்கு பராக்கை எனவும், சுசீந்திரத்துக்கு சுசின்றும் எனவும், தெங்கம்புதூருக்கு தங்கம்புதூர் எனவும், வடிவீஸ்வரத்துக்கு வாடிவீஸ்வரம் எனவும் அச்சிடப்பட்டுள்ளது. இதுபோன்று கல்குளம் தாலுகாவில் முளகுமூடுக்கு முலகுமுடு எனவும், திருவிதாங்கோட்டுக்கு திருவிதாஸ்கோடு எனவும் அச்சிடப்பட்டுள்ளது. திக்கணங்கோடு என்பதற்கு பதில் திக்கம்கோடு என அச்சிடப்பட்டுள்ளது. இதுபோக சில தெருக்களின் பெயர்களும் தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளன. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆங்கிலத்திலிருந்து தமிழில் ஊர் பெயர்களை மொழிமாற்றம் செய்ததால் இந்த தவறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கணக்கெடுத்து சென்னைக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. விரைவில் இந்த குறைகள் நிவர்த்தி செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வழக்கமாக கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தலைமையில் நடக்கும் குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுகளில் பெண் குடும்பத்தலைவர் என புகைப்படத்துடன் ரேஷன் கார்டு வழங்கப்படும். ஆனால் இப்போது வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் பெரும்பாலானவைகளில் பெண்களை குடும்ப தலைவர்களாக அச்சடிக்கப்பட்டுள்ளது. முன்னுரிமை கார்டுகளுக்கு குடும்ப தலைவராக பெண்கள் இடம் பெறுவார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு குடும்பத்தில் 4 பேருக்கு மேல் இருக்கும் ரேஷன் கார்டுகள் முன்னுரிமை ரேஷன் கார்டுகள் என பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு கணவன் மனைவி என இருவர் மட்டும் இருக்கும் குடும்பங்களிலும் ஸ்மார்ட் கார்டில் பெண்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. ஒரு குடும்பத்தில் 4 பேருக்கு மேல்  இருக்கும் ஒவ்வொரு நபர்களுக்கும் 5 கிலோ அரிசி அதிகப்படியாக வழங்கப்படுகிறது. குடும்பங்களில் பிரிந்திருப்பவர்களை இணைக்கும் திட்டமாக பெண்களுக்கு குடும்ப தலைவர் அந்தஸ்து கொடுக்கப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும் முன்னுரிமை அற்ற கார்டுகளிலும் பெண் குடும்ப தலைவராக அச்சிடப்பட்டு வழங்கப்படும் குழறுபடியும் உள்ளது.

ஸ்மார்ட் கார்டுகளில் உள்ள தவறுகளை இ சேவை யைங்களில் திருத்திக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஒரு கார்டுக்கு 25 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும் ஸ்மார்ட் கார்டு தொலைந்தாலும் இ சேவை மையங்களில் நகல் கார்டு பெற்றுக்கொள்ளலாம். அதற்கு 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஸ்மார்ட் கார்டுகள் பலருக்கு வந்திருக்கிறது. ஆனால் அவர்கள் மொபைல் எண்ணுக்கு ஒ.டி.பி. எஸ்.எம்.எஸ். வரவில்லை என்றும், பலரது மொபைலுக்கு வரும் எஸ்.எம்.எஸ்.கள் தெரியாமல் அழிக்கப்பட்டுவிடும் நிலையும் இருப்பதாக அதிகப்படியாக புகார்கள் வந்துள்ளது. இதுபோன்ற புகார்களுக்கு 1967 மற்றும் 18004255901 ஆகிய டோல்பிரி எண்களுக்கு போன் செய்து ஒ.டி.பி. பெற்றுக்கொள்ளலாம். தமிழகம் முழுமைக்கு இந்த இரண்டு எண்கள் மட்டும் இருப்பதால் எப்போதும் இரண்டு எண்களும் பிசியாகவே இருக்கிறது. அதிலும் ரேஷன் கடை புகார்களுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஸ்மார்ட் கார்டு பிரச்னைக்கு 2 அழுத்தவும் என பல எண்களை அழுத்தும்போதே தொடர்பு துண்டிக்கும் பரிதாப நிலையும் உள்ளது. எனவே கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தனி எண் வழங்கவேண்டும், அல்லது தென் தமிழகத்துக்கு மதுரையை தலைமையிடமாகக்கொண்டு தனி புகார் சேவை செல்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS