26
Wed, Apr
21 New Articles

252 தனியார் பள்ளியில் 3,320 இடங்கள் ஒதுக்கீடு

News

தனியார் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

நாகர்கோவில், ஏப்.20:  குமரி மாவட்டத்தில் 252 சிறுபான்மையற்ற தனியார் மெட்ரிக், மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் மூவாயிரத்து 320 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, குழந்தைகளுக்காக இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசால் ஏற்கனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு 2013–-14ம் கல்வியாண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் வகையிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன்பெறும் வகையிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுடன் மேலும் சில வழிகாட்டுதல்கள் கூடுதலாக அரசு வழங்கியுள்ளது. வரும் 2017–18-ம் கல்வியாண்டிற்கு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 252 சிறுபான்மையற்ற தனியார் மெட்ரிக், மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் மூவாயிரத்து 320 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இதற்கான வசதி www. dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் மொபைல் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். செய்தியாக அனுப்பப்படும். மேலும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், நாகர்கோவில், தக்கலை, குழித்துறை மாவட்டக் கல்வி அலுவலகங்கள், திருநெல்வேலி மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம், நாகர்கோவில் மாவட்டத் தொடக்க கல்வி அலுவலகம், நாகர்கோவில், சுசீந்திரம், ராஜக்கமங்கலம், குழித்துறை, தக்கலை, திருவட்டார், குளச்சல், கருங்கல், முஞ்சிறை உதவித் தொடக்கக் கல்விஅலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையங்கள், நாகர்கோவில் எஸ்.எல்.பி மகளிர் உயர்நிலைப் பள்ளி, இறச்சக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி ராஜக்கமங்கலம் அரசு தொடக்கப் பள்ளி, கடியப்பட்டணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளி மேல்புறம் அரசு மேல்நிலைப் பள்ளி, கருங்கல் அரசு மேல்நிலைப் பள்ளி, முஞ்சிறை அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் கட்டணம் இல்லாமல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் குமரி மாவட்டத்திலுள்ள அரசு இ -சேவை மையங்களிலும் பதிவேற்றம் செய்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரில் ஆதரவற்றவர், எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்பே மாணவர் சேர்க்கை வழங்கப்படும். இணையதளம் வழியாக பதிவு செய்வதற்கு பிறப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிடத்திற்கான ஆதாரச் சான்று ஆகிய சான்றிதழ்களுடன் குழந்தைகளின் புகைப்படமும் கொண்டு வரவேண்டும். ஏப்ரல் 20ம் தேதி முதல் மே 18ம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS