24
Mon, Jul
10 New Articles

ஓட்டலில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மருத்துவ தகுதி சான்று

News

ஓட்டலில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மருத்துவ தகுதி சான்று அவசியம் என்று உணவு பாதுகாப்பு அதிகாரி சங்கரநாராயணன் கூறினார்.

கன்னியாகுமரி, ஏப்.14: கொட்டாரம் அனைத்து வியாபாரிகள், தொழில் முனைவோர் சங்கம், குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆகியவை இணைந்து உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டத்தை கொட்டாரத்தில் நடத்தின. இதற்கு சங்க தலைவர் எட்வர்ட் தலைமை தாங்க, செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பிரவீன்ரகு, சங்க துணை செயலாளர் சுகுமாறன் மற்றும் ஏ.வி.சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் துணைத்தலைவர் ரவி வரவேற்று பேசினார்.

இதில் நாகர்கோவில் நகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி சங்கரநாராயணன் கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-

ஓட்டல் மற்றும் கடைகளில் உணவுப்பொருட்களை கண்ணாடிப்பெட்டியில் சுத்தமாக மூடி வைத்திருக்க வேண்டும். உணவு பாதுகாப்புத்தர நிர்வாக சட்டத்தின்படி உணவு பொருட்களில் கலப்படம் செய்வது கண்டு பிடிக்கப்பட்டால், அந்த வியாபாரிக்கு சிறை தண்டனையும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

ஓட்டலில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மருத்துவ தகுதி சான்று கண்டிப்பாக வாங்கி இருக்க வேண்டும். ஓட்டலில் சமையல் அறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதே போல் ரோட்டோரமாக வைத்திருக்கும் கடைகளை சுகாதாரமற்ற முறையில் வைத்து இருக்கக்கூடாது. டீத்தூள்களில் கலப்படம் செய்வதால் புற்றுநோய் பொன்ற கொடிய நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் 6 மாதம் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS