29
Mon, May
12 New Articles

அனுமதியின்றி வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்கள் அகற்றம்

News

நாகர்கோவில் நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்களை அகற்றி, நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டனர்.

நாகர்கோவில், ஏப்.12:  நாகர்கோவில்நகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி அரசியல் கட்சிகளோ, தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்களோ டிஜிட்டல் பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகளை அதிகாரிகள் அவ்வப்போது அகற்றி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் நாகர்கோவில் நகரப்பகுதியில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து அவற்றை அகற்ற நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் (பொறுப்பு) உத்தரவிட்டார். அதன்பேரில் நகரமைப்பு அதிகாரி கெவின்ஜாய் தலைமையில், நகரமைப்பு ஆய்வாளர்கள் சந்தோஷ்குமார், துர்காதேவி மற்றும் நகராட்சி ஊழியர்கள் நேற்று நகர பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த பேனர்கள் அகற்றும் பணி மதியம் 2 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது. வடசேரி அண்ணா சிலை அருகில், வடசேரி பஸ் நிலையம், மணிமேடை சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு, அண்ணா பஸ் நிலையம், கோட்டார், செட்டிகுளம் சந்திப்பு, கே.பி.ரோடு, கலெக்டர் அலுவலக சந்திப்பு, பால்பண்ணை சந்திப்பு, பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம், பெண்கள் கிறிஸ்தவக்கல்லூரி சந்திப்பு, கோர்ட்டு ரோடு, ஒழுகினசேரி ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் டிஜிட்டல் பேனர்கள், தனியார் நிறுவனங்களின் அறிவிப்பு பலகைகள், பேனர்கள் அகற்றப்பட்டன. மொத்தம் 35 டிஜிட்டல் பேனர்களும், 4 விளம்பர பலகைகளும் அகற்றப்பட்டன.

BLOG COMMENTS POWERED BY DISQUS