24
Mon, Jul
10 New Articles

பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை கலெக்டர் பேச்சு

News

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.

நாகர்கோவில், ஏப்.10:   ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் அடிப்படையில் குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவின் மூலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவ அலுவலர்களுக்கு, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 மற்றும் குழந்தைகள் சார்ந்த சட்டங்கள் குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வருவாய் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இந்த பயிற்சிக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

குழந்தைகளின் பாதுகாப்பில் டாக்டர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. பாலியல் வன்முறைக்கு ஆளாகும் குழந்தைகளில் 75 சதவீதம் பேர் அவர்களது ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்கள் மற்றும் மிக நெருங்கிய நண்பர்கள் மூலமாக பாதிக்கப்படுகிறார்கள். குமரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தீங்கு இழைக்கும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  தேவைப்படும் பட்சத்தில் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள்.

எனவே குழந்தைகளுக்கு எதிராக பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்களை தண்டிக்க வேண்டுமென்றால் மருத்துவர்களின் அறிக்கை நேர்மையாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். மேலும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 பிரிவு 27–ன்படி பாதிக்கப்பட்ட குழந்தையை பெண் டாக்டர்கள் தான் பரிசோதனை செய்ய வேண்டும். பாலியல் தொல்லையால் குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். இவர்களுக்கு டாக்டர்களாகிய நீங்கள் சிறந்த ஆலோசனைகள் வழங்கிட வேண்டும்.

பயிற்சியில் மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் வசந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி குமுதா, அரசு மருத்துவ கல்லூரி மனநல மருத்துவ பிரிவு பேராசிரியர் டாக்டர் அருள்பிரகாஷ், அரசு வக்கீல் ஜொஹானா அசோக், நன்னடத்தை அதிகாரி வெங்கட்ராமன், பாதுகாப்பு அதிகாரி பியூலா பெல் ஜெனகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS