24
Mon, Jul
10 New Articles

பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் தேரோட்டம்

News

பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பறக்கை, ஏப்.09:  குமரியின் குருவாயூராகவும், தங்கக்கொடிமரம் உடைய கோவிலாகவும் திகழும் பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த மாதம் 31–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. 5–ம் திருவிழா அன்று கருடனுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. 

9–ம் திருவிழாவான நேற்று தேரோட்டத்தையொட்டி காலை 7 மணிக்கு இருதட்டு வாகனங்களில் சாமி, ஸ்ரீதேவி பூதேவி, கைலாச நாதர் ஆகியோரை வைத்து மேளதாளத்துடன் தேரோடும் நான்கு வீதியில் உலா வந்து பின்னர் கோவிலை சென்றடைந்தது. 

8.40 மணியளவில் சாமி, ஸ்ரீதேவி பூதேவி ஆகியோர் சாமி தேரிலும், கைலாச நாதர் பிள்ளையார் தேரிலும் எழுந்தருளினர். பின்னர், தேரின் சக்கரத்திற்கு தேங்காய் உடைத்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கொடி மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள், ‘ஓம் நமோ நாராயணா... ஓம் காளி ஜெய் காளி...,’  போன்ற கரகோ‌ஷத்தோடு இழுத்து வந்தனர். தேரோடும் ரதவீதியில் பக்தர்களுக்கு இலவசமாக மோர், தயிர் போன்றவை பல்வேறு அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்டது. வீதிகளில் வலம் வந்த தேர், சரியாக 10.50 மணிக்கு நிலைக்கு வந்து நின்றது. பின்னர், வெடிமுழக்கத்துடன் சாமிக்கு அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தேரோட்ட விழா நிகழ்ச்சியில் திருகோவில்களின் இணை ஆணையர் பாரதி, கண்காணிப்பாளர் சிவகுமார், ஸ்ரீகாரியம் சிவ பாஸ்கரன் மற்றும் சேவா சங்கத்தினரும், திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர். 

10–ம் திருவிழாவான இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு வெள்ளி குதிரை வாகனத்தில் சாமி ஆராட்டு துறைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு தெப்பத்திருவிழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகமும், மதுசூதன பெருமாள் சேவா சங்கத்தினரும் இணைந்து செய்து வருகிறார்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS