23
Thu, Nov
10 New Articles

தனியார் வங்கிக்கு ரூ. 4 ஆயிரம் அபராதம் : நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு

News

சேவைக்குறைபாடு காரணமாக தனியார் வங்கிக்கு 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகர்கோவில், ஏப்.04: நாகர்கோவில் ராமவர்மபுரம் கேசரிதெருவைச் சேர்ந்த பொன்ராஜ் மனைவி ராஜம். இவர் தனது குழந்தைகளின் பெயரில் இடலாக்குடியில் ஒரு தனியார் வங்கி  கிளையில் கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி 2 லட்சம் ரூபாயை 3 ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்புத்தொகையாக போட்டுள்ளார். பின்னர் 2011ம் ஆண்டு, வைப்புத்தொகையை மேலும் 3 ஆண்டுகளுக்கு புதுப்பித்துள்ளார். அவ்வாறு புதுப்பித்தால் முதிர்வு நாளில் 3 லட்சத்து 30 ஆயிரத்து 623 ரூபாய் கிடைக்கும் என்று கூறியதன்பேரில் அவர் புதுப்பித்துள்ளார். இந்நிலையில் வைப்புத்தொகையை புதுப்பித்தபோது வைப்புத் தொகையின் சான்றிதழில் 3 லட்சத்து 30 ஆயிரத்து 623 ரூபாய் என குறிப்பிடுவதற்கு பதில் 3 லட்சத்து 15 ஆயிரத்து 473 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

     இது குறித்து வங்கி மேலாளரிடம் கேட்டபோது அவர் சரியாக பதில் கூறாமல் அலைக்கழித்துள்ளார். இதனால் அவர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் தாமஸிடம் இதுகுறித்து புகார் கூறியிருக்கிறார். அவர் இது குறித்து மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் மன்ற தலைவர் நீதிபதி நாராயணசாமி உறுப்பினர் சிவலிங்கம் ஆகியோர் வங்கியின் குறைபாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட ராஜத்துக்கு நஷ்ட ஈடாக 3 ஆயிரம் ரூபாயும், வழக்குச் செலவுத்தொகையாக ஆயிரம் ரூபாய் என மொத்தம் 4 ஆயிரம் ரூபாயை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS