23
Sat, Sep
8 New Articles

குமரியில் 56 டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு

News

சுப்ரீம்கோர்ட் உத்தரவுபடி கன்னியாகுமரி மாவட்டத்தில் 56 டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் மூடப்பட்டன. 

கன்னியாகுமரி, ஏப்.02: தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஏப்ரல் 1ம் தேதி முதல் மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதனால் நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் இருந்த டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. 

குமரி மாவட்டத்தில் ஏற்கனவே 144 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. கடந்த சட்டசபை தேர்தலின்போது தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். தேர்தலுக்கு பிறகு அவர் பதவியேற்ற உடன் தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அப்போது குமரி மாவட்டத்தில் 6 கடைகள் மூடப்பட்டன. இதனால் குமரியில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 138 ஆக இருந்தது. அதன்பிறகு பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கிடையில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனதும் தமிழகத்தில் மீண்டும் 500 டாஸ்மாக் மூடப்பட்டது. அதில் குமரியில் 3 கடைகளை மூடப்பட்டதால் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கு 135 ஆக குறைந்தது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்பேரில் குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த 12 டாஸ்மாக் கடைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலை அருகில் இருந்த 44 கடைகள் என 56 கடைகள் நேற்று மூடப்பட்டன.அந்த வகையில் குமரி மாவட்டத்தில் 56 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதுபோல ஓட்டல்கள், கிளப்புகளில் செயல்பட்டு வந்த 9 பார்களும் அடைக்கப்பட்டன. 

குமரி மாவட்டத்தில் விடுதி, உணவங்களுடன் இயங்கிய நாகர்கோவில் ஸ்ரீகிருஷ்ணா இன், கன்னியாகுமரி ஓட்டல் சிங்கார் உள்ளிட்ட 6 எப்.எல்.3 கடைகள், நாகர்கோவில் ராமவர்மபுரம் கிளப் உள்ளிட்ட 2 எப்.எல் 2 கடைகள், கன்னியாகுமரி ஓட்டல் தமிழ்நாட்டில் இயங்கி வந்த எப்.எல்.3 ஏ ஆகியவை உள்பட 10 ஹைகிளாஸ் பார்களும் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

அதைத்தொடர்ந்து, மூடப்பட்ட டாஸ்மாக் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் அனைத்தும் கோணத்தில் உள்ள டாஸ்மாக் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த டாஸ்மாக் மதுக்கடைகளை வேறு இடத்தில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 

படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மொத்தமாக மூட வேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS