24
Mon, Jul
10 New Articles

இரட்டை பெண் குழந்தைகள் விற்கப்பட்ட விவகாரம்

News

நாகர்கோவிலில் இரட்டை பெண் குழந்தைகள் விற்கப்பட்ட விவகாரத்தில் மேலும் ஒரு குழந்தையை நெல்லையில் போலீசார் மீட்டனர்.

நாகர்கோவில், மார்ச் 28: நாகர்கோவில் வடசேரி அறுகுவிளையை சேர்ந்தவர் நீலாவதி (வயது 20). இவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. வறுமை காரணமாக நீலாவதி ஒரு குழந்தையை ரூ.4 ஆயிரத்துக்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், மற்றொரு குழந்தையை தம்மத்துக்கோணத்தைச் சேர்ந்த வனஜா (38) என்பவருக்கு ரூ.50 ஆயிரத்துக்கும் விற்றார்.

இதுபற்றி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர் குமுதா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைகளை விற்றதாக தாய் நீலாவதி, அவருடைய சகோதரிகள் கலா, ஜெயா மற்றும் குழந்தையை வாங்கிய வனஜா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

மேலும் குழந்தை மீட்கப்பட்டு நெல்லையில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

நீலாவதியிடம் இருந்து மற்றொரு குழந்தையை வாங்கிய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை போலீசார் தேடி வந்தனர். அவர் நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடியில் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் நேற்று நெல்லை மாவட்டம் சென்று அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவருடைய பெயர் சிவபாக்கியம் (வயது 62) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து சிவபாக்கியத்திடம் இருந்து குழந்தையை போலீசார் மீட்டனர். பின்னர், குழந்தையுடன் சிவபாக்கியத்தை நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர். குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் குழந்தையை போலீசார் ஒப்படைத்தனர். மேலும் சிவபாக்கியத்திடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS