26
Wed, Apr
21 New Articles

காரணங்கள் இன்றி நன்செய் நிலத்தை தரிசாக போட்டிருந்தால் நடவடிக்கை

News

உரிய காரணங்கள் இன்றி நன்செய் நிலத்தை தரிசாக போட்டிருந்தால் சொத்து உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கன்னியாகுமரி, மார்ச் 24:  குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்ததாவது ,

வறட்சியினால் பாதிக்கப்பட்ட நெல், பட்டுப்புழு, வாழை விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தென்னை விவசாயிகளுக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை.

குளங்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் அனுமதி தர வேண்டும். 1,051 குளங்களில் மட்டும் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் 3 ஆயிரம் குளங்களுக்கு மேல் உள்ளன. விடுபட்ட குளங்களையும் சேர்க்க வேண்டும். பரப்பளவு அதிகம் உள்ள விவசாயிகளுக்கு 10 யூனிட் வண்டல் மண் போதாது. கூடுதலாக வழங்க வேண்டும்.

தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் குளங்களில் இருந்து அகற்றப்படும் வண்டல் மண், கரையில் போடப்பட்டால் மீண்டும் உள்ளே விழ வாய்ப்புள்ளது. ஆகவே குளங்களின் அருகில் உள்ள விவசாயிகள் இந்த வண்டல் மண்ணை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். மண் எடுக்க அதிகாரிகள் கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது.

 குடிமராமத்து திட்டத்தில் அதிக பரப்பளவு கொண்ட குளங்களுக்கு நிதி குறைவாகவும், குறைவான பரப்பளவு கொண்ட குளங்களுக்கு நிதி அதிகமாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது ஏன்?.

வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு பெறுவதற்கு வழிமுறைகள் என்ன? என்பது தெரியாமல் உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியை பயன்படுத்தி பேச்சிப்பாறை அணையை தூர்வார வேண்டும். அடுத்த வாரம் அமைக்கப்பட உள்ள மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் குழுவுக்கு குறைந்த பட்சம் 5 எக்டேர் பரப்பளவில் தூர்வார அனுமதிக்க அதிகாரம் உண்டு. எனவே ஒரே நேரத்தில் 50 எக்டேர் பரப்பளவு உள்ள பேச்சிப்பாறை அணையை தூர்வார அனுமதி பெற சிரமமாக இருந்தாலும் முதலில் 5 எக்டேரில் தூர்வார மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் குழு அனுமதி அளிப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் பேசினார்கள்.

இதற்கு அதிகாரிகள் பதில் அளித்து பேசும்போது கூறியதாவது:–

விவசாய தேவைகளுக்கு மட்டுமே குளங்களில் மண் எடுக்க அனுமதி அளிக்க முடியும். வணிக தேவைகளுக்காக குளங்களில் மண் எடுக்க அனுமதிக்க முடியாது. குடிமராமத்து பணிகள் நடைபெறும் குளங்களில் பரப்பளவை வைத்து நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அங்கு நடைபெறும் பணிகளைப் பொறுத்தே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நன்செய் நிலங்களை உரிய காரணங்கள் இன்றி (வறட்சி பாதிப்பு இல்லாத காலங்களில்) பிற வணிக நோக்கத்துக்காக வேண்டும் என்றே தரிசாக போட்டிருந்தால் அந்த சொத்தின் உரிமைதாரர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், வருவாய்த்துறையால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படுவதோடு, நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

 கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.2 விலையில் ஒரு கிலோ வைக்கோல் விற்பனை செய்யும் வகையில் திங்கள்நகர், அழகப்பபுரம், தோவாளை, செம்மங்காலை ஆகிய 4 இடங்களில் அரசு கிட்டங்கிகள் திறக்கப்பட்டுள்ளன. தாதுஉப்பு கலவை கலந்த மாட்டுத்தீவனம் அடுத்த வாரத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பேசும்போது கூறியதாவது:–

முதல்கட்டமாக வெளியிடப்பட்டுள்ள மாவட்ட அரசிதழில் 1051 குளங்களில் விவசாயிகள் வண்டல்மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. விரைவில் அடுத்தகட்டமாக வெளியிடப்பட உள்ள அரசிதழில் விடுபட்ட குளங்களையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனுமதியில்லாத குளங்களில் விவசாயிகள் தூர்வாருவோம் என்று சொல்வது சட்டப்படி குற்றம். குளங்கள் பொதுச்சொத்து. தனிநபர் சொத்து கிடையாது. குளங்களில் வண்டல் மண் எடுக்கும் விவசாயிகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே குளத்து மண்ணை விவசாய தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். அந்த மண்ணை விற்பனை செய்தால் அபராதம் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வண்டல்மண் கூடுதலாக தேவைப்படும் விவசாயிகளுக்கு அதிகாரிகள் தேவையறிந்து நடவடிக்கை எடுப்பார்கள்.

வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் சேதத்துக்கு இழப்பீடு பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த கையேடுகளை விவசாயிகளுக்கு வழங்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தேன்.  இந்த கூட்டத்தில் அந்த கையேட்டை அதிகாரிகள் உங்களுக்கு வழங்குவார்கள் (இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கையேடுகளை விவசாயிகளுக்கு வழங்கினர்). பேச்சிப்பாறை அணையை தூர்வாருவது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS