19
Sun, Nov
11 New Articles

அம்மா உணவகத்திற்கு ரூ.25 லட்சம் செலவில் உயிரி எரிவாயு

News

நாகர்கோவில் வடசேரி அம்மா உணவக பயன்பாட்டுக்காக ரூ.25 லட்சம் செலவில் உயிரி எரிவாயு தயாரிக்கும் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதற்காக கியாஸ் கலன் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

நாகர்கோவில், மார்ச் 22: தமிழக முதல்–அமைச்சராக இருந்து, மறைந்த ஜெயலலிதாவால் அம்மா உணவகம் என்ற பெயரில் குறைந்த விலையில் உணவு வழங்கும் உணவகங்கள் மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டன. அதேபோல் குமரி மாவட்டத்திலும் அம்மா உணவகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் நகராட்சி சார்பில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் ஒன்றும், வடசேரி பஸ் நிலைய வளாகத்தில் ஒன்றுமாக இரண்டு அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதில் ஒன்றான வடசேரியில் உள்ள அம்மா உணவகத்தில் உணவு தயாரிக்க கியாஸ் சிலிண்டர்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த உணவகத்துக்கு தமிழக அரசின் “பயோமீத்தேனேசன்“ திட்டத்தின்கீழ் ரூ.25 லட்சம் செலவில் உயிரி எரிவாயு தயாரிப்பு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இந்த திட்டத்தின்படி எரிவாயு உற்பத்திக்கான கலன் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப்பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சுரேஷ்குமார் கூறியதாவது:–

தமிழக அரசின் “பயோமீத்தேனேசன்“ திட்டத்தின்கீழ் ரூ.25 லட்சம் செலவில் உயிரி எரிவாயு தயாரிக்கும் திட்டப்பணிகள் நகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக இந்த திட்டத்துக்கான கியாஸ் கலன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆயிரம் கிலோ கொள்ளளவு கொண்ட இந்த கலனில் காய்கறி கழிவுகள், உணவுக்கழிவுகள், மனித கழிவுகள் போன்ற ஆயிரம் கிலோ எடையுள்ள கழிவுகளை போடலாம். நார்ச்சத்து உள்ள கழிவுகளை இதில் போடக்கூடாது. இவ்வாறு போடக்கூடிய கழிவுகள் மூலம் 1 மாதத்தில் உயிரி எரிவாயுவாக மாறி கலன் அருகில் உள்ள பலூனில் கியாஸ் வந்து சேரும். பின்னர் “பைப்லைன்“ மூலம் அம்மா உணவகத்தில் உள்ள கியாஸ் அடுப்புகளுக்கு இணைப்புக் கொடுத்து உணவு தயாரிக்கலாம். கியாஸ் கலனில் இருந்து சுமார் 6 கி.மீ. தூரம் வரை உள்ள அடுப்புகளுக்கு கியாஸ் இணைப்புக் கொடுக்கலாம்.

இந்த திட்டப்பணிகள் முடிவடைய இன்னும் 1 மாதம் ஆகும். அதன்பிறகு கலனில் கழிவுகளை சேமித்து வைத்து கியாஸ் உருவாக 1 மாத கால அவகாசம் ஏற்படும். எனவே வருகிற மே மாத இறுதியில் இருந்து வடசேரி அம்மா உணவகத்துக்கு தேவையான கியாசை இந்த உயிரி எரிவாயு திட்டத்தின் மூலம் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS