24
Mon, Jul
10 New Articles

தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது பொன்.ராதாகிருஷ்ணன்

News

இலங்கை கடற்படையால் தமிழக மீனவரை சுட்டுக்கொன்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

 

நாகர்கோவில், மார்ச் 08: இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு இலங்கை அரசு கண்டிப்பாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

மீனவர் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சி செய்து வருகிறார். ஏற்கனவே அவரது தலைமையில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண மத்திய அரசு எத்தனை கோடி வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக உள்ளது. இலங்கை மற்றும் தமிழக மீனவ பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு இலங்கை அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் 31 இடங்களில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒரு இடத்தில் இந்த திட்டத்தை கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வேறு எந்த இடத்திலும் எதிர்ப்பு இல்லை. தமிழகத்தில் இந்த திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் பா.ஜனதா அரசு செயல்படுத்தாது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முதலில் கொண்டு வந்தது யார்? என்பதை மக்கள் அறிவார்கள். தற்போது தமிழகத்தில் எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அவற்றை எதிர்த்து வருகிறார்கள். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது சில அமைப்புகள் தலைதூக்காமல் இருந்தன. அவரது மறைவுக்குப் பிறகு அந்த அமைப்புகள் தலைதூக்கி வருகின்றன. இதுபற்றி உளவுத்துறை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1967-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சராக அண்ணா பொறுப்பேற்றார். அதன்பிறகு கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை திராவிட கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. ஆனால் இதுவரை தமிழகத்துக்கு எந்த பெரிய திட்டங்களும் வரவில்லை. அதற்காக யாரும் முயற்சியும் செய்யவில்லை. மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தபிறகு தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், பணிகள் நடைபெறுகின்றன. இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தி.மு.க.வில் அண்ணாவுக்கு பிறகு கருணாநிதி பொறுப்புக்கு வந்தார். இப்போது அவர் அரசியல் பணிகளை மேற்கொள்ள இயலாத நிலையில் உள்ளார். அ.தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆரும், அவருக்குப்பிறகு அதனை வழிநடத்திய ஜெயலலிதாவும் இப்போது நம்மிடையே இல்லை. அ.தி.மு.க. கட்சி இப்போது 3 பிரிவுகளாக உள்ளன. சசிகலா மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பு வகித்த ஓ.பன்னீர்செல்வம் 2 கமிஷன்கள் அமைக்கப்படும் என பதவியில் இருந்தபோது கூறினார். அதில் ஜல்லிக்கட்டு விவகாரத்துக்கு கமிஷன் அமைக்கப்பட்டது. இதேபோல் ஜெயலலிதா மரணம் குறித்தும் கமிஷன் அமைக்கப்பட்டு நீதி விசாரணை நடத்தப்படும் எனக்கூறி இருந்தார். அது செயல்படுத்தப்படவில்லை.

அவருக்கு அடுத்து முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி 5 திட்டங்களில் கையெழுத்திட்டார். அதில் ஒரு திட்டம் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷனாக இருக்கும் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி எந்த அறிவிப்பும் வரவில்லை. இது எங்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக ம.தி.மு.க. வந்தது. 1996-ல் த.மா.கா. உருவானது. அடுத்து தே.மு.தி.க. வந்தது. ஆனால் எந்த கட்சியும் மக்களின் ஆதரவை பெறவில்லை. இப்போது பா.ஜனதா கட்சிக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது. மக்களின் தேடல் பா.ஜனதா பக்கம் திரும்பி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS