குழித்துறை அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் சோதனை
குழித்துறை, ஜன.25: குழித்துறை அரசு மருத்துவமனையில் திடீர் சோதனை நடத்திய கலெக்டர் நாகராஜன் அறை அறையாக சென்று சோதனையிட்டதுடன், டாக்டர்களிடமும், பணியாளர்களிடம் விபரம் கேட்டறிந்தார்.
குமரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக நாகராஜன் பொறுப்பேற்றுள்ளார். அவர் நேற்று குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு திடீரென வந்தார். அதே வேகத்தில் அவர் மருத்துவமனையில் உள்ள புற நோயாளிகள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, விபத்து சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவ பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, சேமிப்பு அறை, பிண பரிசோதனை அறை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் சென்று பார்வையிட்டார். மேலும், அந்தந்த பிரிவு டாக்டர்களிடமும், பணியாளர்களிடம் விபரங்கள் கேட்டறிந்தார்.
மேலும் மருத்துவமனையில் பூட்டிக்கிடந்த ஓவ்வொரு அறையாக திறந்து பார்த்து விபரங்கள் கேட்டறிந்தார். இதைபோல் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான நம்பிக்கை ஆலோசனை மையத்தில் சென்று பார்வையிட்டார். எய்ட்சால் பாதிக்கப்பட்டு ஆலோசனை பெற்று செல்லும் நோயாளிகள் மீது தொடர் கண்காணிப்பு வைத்துக் கொள்ளுமாறு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
மேலும் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் ஒவ்வொரு பிரிவிலும் நோயாளிகள் பார்வையிடம், சிகிச்சைபகுதி போன்றவை அருகருகே அமைந்திருக்கும் வகையில் மாற்றம் செய்யுமாறு கூறினார்.
பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோயில் மகாகுமாபிஷேக விழா இன்று துவக்கம்
குலசேகரம்,ஜன.25: குலசேகரம் பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோயில் விழாவில் மகாகும்பாபிஷேகம் வரும் 30ம் தேதி நடக்கிறது.
இந்த கோவில் கும்பாபிஷேக விழா இன்று துவங்கி வரும் 30ம் தேதி மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. துவக்க நாளான இன்று (25ம் தேதி) காலை தீபாராதனை, ஆசாரிய வரணம், பிரசாத சுத்தி, அங்குராரோபணம், அஸ்திர கலசபூஜை, ராஹோஷ்ண ஹோமம், வாஸ்துபலி, வாஸ்து கலசாபிஷேகம், வாஸ்து புண்ணியாகம், அத்தாழ பூஜை நடக்கிறது.
ஆறாம் நாள் (30ம் தேதி) காலை நிர்மால்ய தரிசனம், கணபதிஹோமம், உஷ்பூஜை, அதிவாசத்திங்கல் உஷ்பூஜை, பரிகலசாபிஷேகம், மரப்பாணி, கலசாலங்கார பிரதிஷ்ணம், முகூர்த்தம், 9.45ல் இருந்து பகல் 11க்குள் மகாகும்பாபிஷேகம், உபதேவதைகளுக்கு பிரதிஷ்டை, மகாநிவேத்தியம், சர்வாலங்கார பூஜை, தீபாராதனை, படித்தரம் நிச்சயிக்கல், தட்ச்சணை அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை கும்பாபிஷேக குழுத் தலைவர் ரமேஷ்பிரசாத், தலைமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் ரப்பர் கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
நாகர்கோவில், ஜன. 24: குமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் ரூ.25 லட்சம் இழப்பு ஏற்பட்டது.
குமரி மாவட்டத்தில் உள்ள அரசு ரப்பர் கழகத்தின் கீழ் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால் உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தி புதிய சம்பளம் வழங்கக்கோரி நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தமும், அரசு ரப்பர் கழக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்த போவதாக தொ.மு.ச. காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தன.
அதன்படி நேற்று அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு டிசம்பர் 1 2010 முதல் புதிய சம்பள ஒப்பந்தம் செய்ய வேண்டும். ஆனால் அப்போது இடைக்கால நிவாரணமாக 80 ரூபாய் 56 காசு வழங்க முடிவு செய்யப்பட்டது. தற்போது தொழிலாளர்களுக்கு ரூ.13 ஆயிரம் மாத ஊதியம் வழங்க வேண்டும். அரசு ரப்பர் கழகம் வனத்துறையுடன் முன்பு இருந்தது. அதே போல் வனத்துறையுடன் அரசு ரப்பர் கழகத்தை இணைக்க வேண்டும் என வலியுறுத்தி வேலை நிறுத்தம் மற்றும் ஆர்பாட்டமும் நடத்தி வருகிறோம்.
இன்றைய வேலை நிறுத்த போராட்டத்தில் தொ.மு.ச., காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள தொழிற்சங்கத்தினர் மட்டுமல்லாமல் இதர தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்களும் சேர்த்து 3,500 பேர் வேலைக்கு செல்லவில்லை. இவ்வாறு இளங்கோ கூறினார்.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக அரசுக்கு சுமார் ரூ.25 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் பேசும் போது கூறியதாவது :
அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு 2 மாதத்தில் உயர்மட்டக்குழு அமைத்து புதிய சம்பளத்தை பெற்று தருவோம் என்று வனத்துறை அமைச்சர் பச்சைமால் கூறினார். 2 மாதம் முடிந்து விட்டது. அமைச்சரின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு நாள் வேலை நிறுத்தமும், ஆர்பாட்டமும் நடைபெறுகிறது. தனியார் தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.500 சம்பளமாக வழங்கும் போது அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு ரூ.250 வழங்கப்படுகிறது. ஆகவே இதில் தனி கவனம் செலுத்தி தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேன்டும். அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், முற்றுகை போராட்டம், மறியல் வேண்டுமெனன்றால் சிறை நிரப்பும் போராட்டமும் நடத்த தயாராக இருக்கிறோம். இவ்வாறு முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறினார்.
கடலோர காவல்படை ஆண்டு விழா
கன்னியாகுமரி: இந்திய கடலோர காவல்படையின் ஆண்டு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு நேற்று பைக் பேரணி துவங்கியது.
கடல் வழியாக போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் இந்திய கடலோர காவல்படை கடந்த 1978ம் ஆண்டு துவங்கப்பட்டது. சென்னையை தலைமையிடமாக கொண்டு கிழக்கு கடலோர காவல்படை செயல்பட்டு வருகிறது. கடலோர காவல்படையின் பணிகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கடலோர காவபடை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கடலோர காவல்படை தினம் பிப்ரவரி ஒன்றாம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நேற்று கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு பைக் பேரணி துவங்கியது. இந்த பேரணிக்கு கடலோர காவல்படை கமாண்டண்ட் கோகுல் தலைமை வகித்தார். கலெக்டர் நாகராஜன் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக கமாண்டண்ட் கோகுல் நிறுபர்களிடம் கூறியதாவது: கடற்படை ஆண்டு விழாவை முன்னிட்டு “மீனவ நண்பன்” என்று பெயரிடப்பட்ட இந்த பைக் பேரணி 900 கி.மீட்டர் தூரத்தை கடக்கிறது. கன்னியாகுமரியில் புறப்பட்டு தூத்துக்குடி, தங்கச்சிமடம், அக்கரைபேட்டை, காரைக்கால், புதுச்சேரி, மாமல்லபுரம் வழியாக சென்னையை அடைகிறது. சென்னையில் தமிழக கவர்னர் ரோசையா பேரணியை நிறைவு செய்து வைக்கிறார். இந்த பயணத்தில் ஆறு பைக்குகளில் 12 வீரர்கள் செல்கின்றனர். பைக் பேரணி செல்லும் கிராமங்களில் மருத்துவ முகாம், கலந்துரையாடல் ஆகியன நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
டாஸ்மார்க் கடைகளில் கள் விற்க வலியுறுத்தல்
கன்னியாகுமரி,ஜன.22: கிராம பொருளாதாரத்தை மீட்கவும் பனை தென்னை மரங்களை காக்கவும் கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான விழிப்புணர்வு வாகன பிரசார பயணம் நேற்று துவங்கியது.
கிராம பொருளாதாரத்தை மீட்கும் விதத்திலும், காக்கும் நோக்கிலும் மக்கள் கிராமங்களை விட்டு வெளியேறாத வகையிலும் அரசின் திட்டங்கள் அமைய வேண்டும். கள்ளுக்கான தடையை நீக்கி கள்ளை மதிப்புக்கூட்டு பொருளாக மாற்றி உலக அளவில் சந்தைப்படுத்தி அதிக அளவில் தமிழ்நாடு அரசு அன்னிய செலவாணி ஈட்ட வேண்டும். சுதேசி காக்கப்பட வேண்டும், விதேசி விலக்கப்பட வேண்டும். உழவர்களுக்கும், உழவு தொழிலுக்கும் பாதுகப்பு அளிப்பதன் மூலம் நாட்டின் உணவு பாதுக்காப்பு உறுதி செய்யப்பட வேண்டும். உலக அளவில் மதுவிலக்கு தோற்று போயிருந்தாலும் அரசின் இலக்கு மதுவிலக்கை நோக்கியே இருக்க வேண்டும்.
மதுவிலக்கு கொண்டு வரப்படும்வரை டாஸ்மாக் விற்பனை கடைகளில் பனை, தென்னை பொருள்களை கொண்டு தரமாக தயாரிக்கப்பட்ட கள்ளை விற்பனை செய்ய வேண்டும். இது அனைத்தையும் உள்நாட்டிலும் உலக அளவிலும் சந்தைப்படுத்த வேண்டும். வளர்ந்த நாடுகளில் இருப்பதுபோல இந்திய குடிமக்களுக்கும் வயதான காலத்தில் வலுவான சமூக பாதுகாப்பு அளித்திட வேண்டும். நதிகள் நாட்டுடமையாக்கப்பட்டு இந்திய நாட்டில் இறையான்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் வலு சேர்க்க வேண்டும். உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு நேற்று வாகன பிரசார பேரணி துவங்கியது.
இந்த பிரசார பயணத்திற்கு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை வகித்தார். வாகன பிரசார பயணம் கன்னியாகுமரியில் துவங்கி மாமல்லபுரம் வழியாக வரும் 26ம் தேதி சென்னையை சென்றடையும் பின்னர் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கைகளை அடங்கிய மனு அளிக்கப்படுகிறது.
குமரிக்கு அதிக பறவைகள் வருவதாக வனபாதுகாவலர் தகவல்
நாகர்கோவில், ஜன.22: குமரிமாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு துவங்கியது. இதில் பல்வேறு வகையிலான பறவைகள் இருப்பதாகவும், கடந்த ஆண்டை விட அதிக அளவு பறவைகள் இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்ட உதவி வன பாதுகாவலர் ஜெயபேரின்பகுமார் தலைமையில் 35 வன ஊழியர்கள் சேர்ந்து
5 குழுக்களாக பிரிந்து ஆய்வில் ஈடுபட்டனர். இதில் கூளக்கரா, செங்கல்நாரை, ஊசிவால்வாத்து, கொக்கோழிகள், நீரைதாழைகோழி ஆகியன இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்தக்கட்ட ஆய்வு வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறுகிறது.
இதுகுறித்து வனபாதுகாவலர் ஜெயபேரின்பகுமார் கூரியதாவது : ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. நவீன கருவிகள், மற்றும் பைனாகுலர் மூலம் குறிப்பு எடுத்து வருகிறோம். குமரி மாவட்டத்தில் ஆண்டில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான அரியவகை பறவைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆண்டு பருவநிலை மாற்றத்தால் அதிகளவு பறவைகள் வந்துள்ளது. இந்த கணக்கெடுப்பு முடிந்ததும் அதனை கோடியகரை வன உயிரிய சரணாலயத்தில் அறிவிப்போம். இவ்வாறு ஜெயபேரின்பகுமார் கூரினார்.
குழந்தைகளை ஒப்பிட்டு பேசுவதால் தாழ்வு மனப்பான்மை வளர்கிறது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை
களியக்காவிளை, ஜன.20: குழந்தைகளை ஒப்பிட்டு பேசுவதால் அவர்களின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளர்வதாக மாவட்ட கல்வி அலுவலர் அறிவுரை கூறினார்.
களியக்காவிளை அருகே மொட்டக்காலை அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் கல்வி மேலாண்மைக் குழு தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவர் உதவும் கரங்கள் சார்பில் விபத்தில் காயமடைந்த ஜெயராஜ் என்ற மாணவனுக்கு நிதி உதவியை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது
கல்வி என்பது பள்ளிக்கூடத்துடன் மட்டும் முடிந்து விடுவதோ, ஆசிரியர்களுக்கு மட்டும் தொடர்புடையதோ அல்ல. மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பெற்றோருக்கும் பங்கு உண்டு
அதனால் தான் இந்த மேலாண்மைக்குழு தொடங்கப்படுகிறது.
மேலும் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோரை வீடுகளில் சந்திக்கும் ‘இல்லம் நோக்கி கல்வி’ என்ற நிகழ்ச்சி மூலம் பல வீடுகளில் பெற்றோரை சந்தித்து கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறோம்.
பெற்றோர் குழந்தைகளின் படிப்பை கவனிக்க வேண்டும். ஒருபோதும் தங்கள் பிள்ளைகளை பிற மாணவர்களுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். இவ்வாறு ஒப்பிட்டு பேசுவதால் அவர்கள் மனதில் தாழ்வு மனப்பானமை வளர்கிறது. எல்லா விஷயத்திலும் ஊக்க படுத்தி மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி கொடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
போக்குவரத்து வசதி உள்ள பள்ளியில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்க கோரிக்கை
நாகர்கோவில், ஜன.20 தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்புச் செயலாளர் வள்ளிவேலு, மாவட்ட தலைவர் ராபர்ட் ஜேம்ஸ், செயலாளர்
ஜான்ஜெரோம் மிலாடு ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு மையம் காற்றோட்டம், விசாலமான கட்டிட அமைப்புடன் அனைத்து அடிப்படை வசதிகள் கொண்ட பள்ளியில் அமைய வேண்டும் என்பதோடு, ஆசிரியர்கள் எளிதாக வந்து செல்லக்கூடிய வகையில் வசதியான போக்குவரத்து மிகுந்த மையமான பகுதியில் அமைய வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை.
ஆனால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விடைத்தாள் திருத்தும் மையம் பொது நியதிக்கு மாறாக மாவட்டத்தின் மைய பகுதியில் அமையாமல் போக்குவரத்து சிரமம் மிகுந்த குளச்சல் புனித
மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. உரிய நேரத்தில் வந்து செல்ல ஆசிரியர்கள் வந்து செல்ல மிகவும் சிரமபட்டனர். இதை தவர்க்கும் பொருட்டு நடப்பு ஆண்டில் நாகர்கோவிலில் ஒரு பள்ளியோ அல்லது நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் அமைந்துள்ள ஏதேனும் ஒன்றிலோ மட்டுமே அமைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை தேர்வுத்துறை இயக்குனர் வசந்தரா தேவி, இணை இயக்குனர் ஆரோக்கியதாஸ், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளனர்.
மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம் 22 ந்தேதி நடக்கிறது
ஜன.20: மாணவர்களுக்கான இலவச உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம் சுவாமியார்மடம் வசந்தமாளிகை ஆடிட்டோரியத்தில் வருகிற 22 ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. நிகழ்ச்சிக்கு சுபாஷ்குமார் தலைமை தாங்குகிறார்.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் முகாமை தொடங்கி வைத்து பேசுகிறார். ஆசிரியர் பயிற்சி குறித்து கிரேஸ் ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர் மகேஷ்குமார் பேசுகிறார். மருத்துவ துறை குறித்து திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி பேராசிரியர் ராஜா பிரதீ பேசுகிறார். மேலும் அனைத்து உயர்கல்வி குறித்தும் முன்னணி கல்வி நிறுவன பேராசிரியர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள்.
முல்லை பெரியாறு அணை பிரச்னை : திருவனந்தபுரத்தில் பந்த் பிசுபிசுப்பு
களியக்காவிளை : முல்லை பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த பந்த் பிசுபிசுத்தது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டுமென தமிழக அரசு கூறி வருகிறது. ஆதேவேளை கேரள அரசு, அணை பலவீனம் அடைந்துள்ளது என கூறி அணையை முழுமையாக அகற்றிவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என வலியுறுத்துகிறது. அணையின் நீர்மட்டத்தை குறைக்க சுப்ரீம் கோர்ட் மறுத்ததுடன் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டது.
தற்போது சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் படி அணையின் உறுதித்தன்மை கண்டறியும் ஆய்வுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் அணையை உடைத்துவிட்டு புதிய அணை கட்ட வலியுறுத்தி “முல்லை பெரியாறு போராட்ட குழு’ சார்பில் நேற்று கேரளாவில் பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு அம்மாநில அரசியல் கட்சிகள் சிலவும் ஆதரவு தெரிவித்தன.
கேரளாவில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், திருவனந்தபுரம் மாவட்டத்தில் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. தனியார் வாகனங்கள் குறிப்பாக ஆட்டோக்கள் நேற்றைய பந்தில் பங்கேற்கவில்லை. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன.
அலுவலகங்களில் பணியாளர்கள் குறைந்த அளவிலேயே வந்திருந்தனர். பள்ளி, கல்லூரிகளிலும் மாணவர்களின் வருகையும் குறைவாக இருந்தது. தமிழகத்தில் இருந்து அரசு டவுன் பஸ்கள், விரைவு பஸ்கள் களியக்காவிளை பஸ் ஸ்டாண்ட் வரை சென்று திரும்பின. கொல்லங்கோடு, பனச்சமூடு உள்ளிட்ட பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன. அதேவேளை கேரள அரசு பஸ்கள் குமரி மாவட்டத்தில் வழக்கம் போல் இயக்கின.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. மாநில எல்லையோரத்தில் அமைந்துள்ள பாறசாலை, பகவதியான்விளை, விழிஞ்ஞம், பூவாறு, நெய்யாற்றின்கரை, பாறசாலை, காரக்கோணம் பகுதிகளில் பெரும்பாலான கடைகள், வர்த்தக ஸ்தாபனங்கள், ஹோட்டல்கள் திறக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கவில்லை.
எல்லையோர பகுதிகளில் இருமாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். களியக்காவிளையில் குமரி மாவட்ட எஸ்.பி., பிரவேஷ்குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முல்லை பெரியாறு அணை பிரச்னையை வலியுறுத்தி நேற்று அறிவிக்கப்பட்டிருந்த பந்த், குமரி மாவட்டத்தை ஒட்டியுள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் பிசுபிசுத்தது.